Archives: ஜூலை 2023

கூடுதல் கிருபை தேவை

திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் என் அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவள் சென்ற பிறகு, இன்னொரு பெண் என்னிடம் வந்தாள்: “அவளைப் பற்றி கவலைப்படாதே. அவளை “கூ.கி.தே” என அழைக்கிறோம்; அதாவது “கூடுதல் கிருபை தேவை” ” என்றாள்.

 

நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின் போதும் அந்த வாக்கிய சுருக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து “கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தாள், மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தாள் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். அவளையும் மற்றவர்களையும் கூ.கி.தே என நியாயந்தீர்த்து முத்திரை பதித்து கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். கடந்த காலத்தில். எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப் போல எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது.

 

எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்”. (எபேசியர் 2:3) ஆனால் தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசை கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல”. (எபேசியர் 2:9) என்கிறார்.

 

இந்த வாழ்நாள் பயணத்தின் போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, ​​பரிசுத்த ஆவியானவர் நம் குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9).

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நம்பிக்கை

ஜூன் 1965 இல், ஆறு டோங்கன் இன இளைஞர்கள் சாகசத்தைத் தேடி தங்கள் தீவிலிருந்து படகில் சென்றனர். ஆனால் முதல் இரவில் ஒரு புயல் அவர்களின் பாய் மரம் மற்றும் சுக்கானை உடைத்தபோது, ​​அவர்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத ‘அட்டா’ தீவை அடைவதற்கு முன்பு உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆனது.

 

சிறுவர்கள் இணைந்து அட்டா தீவில் உயிர் பிழைக்க, சிறிய உணவுத் தோட்டம் அமைப்பது, மழைநீரைச் சேமிக்க மரத்தடிகளை குழிபறிப்பது, தற்காலிக உடற்பயிற்சி கூடம் கட்டுவது போன்றவற்றில் இணைந்து பணியாற்றினார்கள். ஒரு சிறுவன் பாறை விழுந்ததில் கால் முறிந்தபோது, மற்றவர்கள் குச்சிகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தி அதை குணப்படுத்த உதவினர். வாக்குவாதங்கள் கட்டாய சமரசத்துடன் ஒப்புரவாக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு நாளும் பாடல் மற்றும் ஜெபத்துடன் துவங்கியது. அவர்கள் மரித்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்குகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாக வெளிவந்ததை எண்ணி அவர்களது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர்.

 

முதல் நூற்றாண்டில் இயேசுவின் விசுவாசியாக இருப்பது ஒரு தனிமைப்படுத்தப்படும் அனுபவமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்டு, அடிக்கடி குடும்பத்தில் இருந்து விலகியிருப்பதால், நீங்கள் அலைந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு ஒழுக்கத்துடனும், ஜெபத்துடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 4:7), ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும் (வ. 8), வேலையைச் செய்ய திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் (வவ.10-11) எனக் குறிப்பிடுகிறார் . காலப்போக்கில், தேவன் அவர்களை அவர்களின் சோதனையின் மூலம் "சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார்” (5:10)

 

சோதனைக் காலங்களில், "விசுவாசம் மற்றும் நம்பிக்கை" நமக்கு தேவை. நாம் ஜெபித்து ஒற்றுமையுடன் வேலை செய்யும் போது, தேவன் நம்மையும் நிலைநிறுத்துவார்.

ஒவ்வொரு துக்கமும்

"நான் சந்திக்கும் ஒவ்வொரு துக்கத்தையும் அளவிடுகிறேன்," என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிஞர் எமிலி டிக்கின்சன் எழுதினார்: "குறுகிய ஆய்வு கண்களால் அது கடினமானதாயிருக்கிறதா அல்லது அவை எளிதானதுதானா என நான் ஆச்சரியப்படுகிறேன." மக்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தாங்கள் காயப்படுத்தப்பட்ட விதவிதமான வழிமுறைகளை இந்த கவிதை எதிரொலிக்கிறது, ஏறக்குறைய தயக்கத்துடன், அவளது ஒரே ஆறுதலாக, கல்வாரியில் அவளது சொந்த காயங்கள்  தனது இரட்சகரின் காயங்களில் "துளைக்கப்பட்ட ஆறுதலாக" பிரதிபலிக்கப்பட்டதை கண்டு ”அக்காயங்களை என் காயங்களைப் போலவே உணருகிறேன்” என்றாள்.

 

வெளிப்படுத்தின விசேஷம் நம் இரட்சகராகிய இயேசுவை,” அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி“ என்று விவரிக்கிறது (5:6; பார்க்க வ. 12) அவருடைய காயங்கள் ஆறவில்லை. அவருடைய மக்களின் பாவம் மற்றும் விரக்தியைத் தம்மீது எடுத்துக்கொள்வதன் மூலம் சம்பாதித்த காயங்களின் (1 பேதுரு 2:24-25) மூலம் புதிய வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பெற முடியும்.

 

மேலும், இரட்சகர் தம் பிள்ளைகள் "யாவரின் கண்ணீரையும் துடைப்பார்" (21:4) என்று வெளிப்படுத்தின விசேஷம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கிறது. இயேசு அவர்களின் வலியைக் குறைக்க மாட்டார், ஆனால் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட துக்கத்தையும் உண்மையாகப் பார்த்து கவனித்துக்கொள்கிறார்.அவருடைய ராஜ்யத்தில் புதிய, குணப்படுத்தும் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அவர்களை அழைக்கிறார், அங்கு ”இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின”. (வ.4) ஜீவத் தண்ணீரின் ஊற்றிலிருந்து செலவில்லாமல் குணப்படுத்தும் நீர் பாய்கிறது (வ. 6; பார்க்க 22:2).

 

நம்முடைய இரட்சகர் நம்முடைய ஒவ்வொரு துக்கத்தையும் சுமந்திருப்பதால், அவருடைய ராஜ்யத்தில் நாம் ஓய்வையும், சுகத்தையும் காணலாம்.

துக்கத்தில் நம்பிக்கை

லூயிஸ் ஒரு கலகலப்பான, விளையாட்டுத்தனமான பெண். அவள் சந்திக்கிற அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுவாள். ஐந்து வயதில் ஓர் அரிய நோயினால் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய திடீர் மரணம் அவளுடைய பெற்றோர் டே டேக்கும், பீட்டருக்கும், அவர்களுடன் பணிபுரிந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் வருந்தினோம்.

 

ஆனால் அவளுடைய பெற்றோர் டே டேயும், பீட்டரும் அதை கடந்து செல்வதற்கான வலிமையைக் கண்டுகொண்டனர். அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நான் டே டேவிடம் கேட்டபோது, லூயிஸ் இளைப்பாறும் இயேசுவின் அன்பான கரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் பெலனை பெற்றதாகச் சொன்னாள். "நித்திய வாழ்விற்குச் சென்ற எங்கள் மகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றும், "தேவனின் கிருபையினாலும், பலத்தினாலும், துக்கத்தின் வழியாக செல்லவும், அவர் ஒப்படைத்த பொறுப்பை தொடர்ந்து செய்யவும் முடிந்தது" என்றும் கூறினாள்.

 

டே டே யின் நம்பிக்கை மற்றும் ஆறுதல், தம்முடைய குமாரனில் தன்னை வெளிப்படுத்திய தேவனுக்குள் இருந்தது. வேதத்தில் விசுவாசம் வைப்பதென்பது வெறும் நம்பிக்கையை விட அதிகமானது. அவர் ஒருபோது மீறாத தம்முடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கொண்டுள்ள நிச்சயமாகும். பிரிந்த நண்பர்களுக்காக வருந்துபவர்களை பவுல் ஊக்குவித்தபடி, நம்முடைய துக்கத்தில் இந்த வல்லமை வாய்ந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளலாம்: ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்”(I தெசலோனிக்கேயர் 4:14). இந்த உறுதியான நம்பிக்கை இன்று நமக்கு பலத்தையும், ஆறுதலையும் தரட்டும்; நமது துக்கத்திலும் கூட. 

ஜெபத்தில் நினைவு கூறுங்கள்

ஆங்கிலேய ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் வருடாந்திர சேவைக்கான விருதான “மவுண்டி மனி” விருதை, 2021 ஆம் ஆண்டில் மால்கம் கிளவுட் இரண்டாம் எலிசபெத் மகாராணியிடம் பெற்றார். அச்சமயத்தில் நூறு வயதாக இருந்த கிளவுட், தனது வாழ்நாளில் ஆயிரம் வேதாகமங்களை வழங்கியதற்காக கௌரவிக்கப்பட்டார். கிளவுடிடம் வேதாகமத்தைப் பெற்ற அனைவரின் பெயர்களையும் எழுதி வைத்து, தொடர்ந்து‌ அவர்களுக்காக ஜெபிப்பார்.

 

கிளவுடின் உண்மையான ஜெபம், புதிய ஏற்பாட்டில் நிறைந்திருக்கும் பவுலின் எழுத்தில் அன்பிற்கான வல்லமையான எடுத்துக்காட்டை  நமக்கு காட்டுகிறது. பவுல் தனது கடிதங்களைப் பெறுபவர்களுக்காக, அடிக்கடி ஜெபிப்பதாக உறுதியளித்தார். அவரது நண்பரான பிலேமோனுக்கு அவர் எழுதுகிறார்: “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி” (பிலேமோன் 1:4) என்று. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், ”நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து” (II தீமோத்தேயு 1:3) என எழுதினார். ரோமாபுரியில் உள்ள சபையாருக்கு, பவுல் அவர்களுக்காக ஜெபத்தில் "இடைவிடாமல்", "எல்லா நேரங்களிலும்" ஜெபிப்பதாக வலியுறுத்தினார் (ரோமர் 1:9-10).

 

மால்கமைப் போல ஜெபிக்க ஆயிரம் பேர் இல்லை என்றாலும், நமக்கு அறிமுகமானவர்களுக்காக நாம் செய்யும் திட்டமிட்ட ஜெபம் வல்லமை மிகுந்ததாயிருக்கிறது ஏனெனில் தேவன் அவைகளுக்கு பதிலளிக்கிறார். ஒரு குறிப்பிட்ட தனிநபருக்காக ஜெபிக்கும்படி, அவருடைய ஆவியால் தூண்டப்பட்டபோது, ஒரு எளிய ஜெப நாள்காட்டி கூட பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டுகொண்டேன். பெயர்களை தினசரி நாட்காட்டியிலும், வாராந்திர நாட்காட்டியிலும் பிரித்து அவர்களுக்காக உண்மையாக ஜெபிக்க உதவியது . நாம் மற்றவர்களை ஜெபத்தில் நினைவு கூறுவது, என்னே ஓர் அழகிய அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது.